அதானியின் சரியும் வணிக சாம்ராஜ்ஜியம், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்குமா?
பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP VIA GETTY IMAGES
சில வாரங்களுக்கு முன்பு வரை, இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி ப்ளூம்பெர்க் குறியீட்டின் பில்லியனர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் ஜனவரி 24 ஆம் தேதி வெளியான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு அவர் இந்த பட்டியலில் 21 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த சரிவு இன்னும் தொடர்கிறது.
இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து இப்போது வரை கௌதம் அதானி 10000 கோடி டாலர்களுக்கு மேல் இழந்துள்ளார். இது அவரது வணிக சாம்ராஜ்யத்திற்கு பெரிய அடி என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதானி குழுமத்திற்கு மட்டுமே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? இதன் பதில் ’இல்லை’என்பதுதான்.
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் இந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
20,000 கோடி திரட்டுவதற்காக வெளியிடப்பட்ட தன் FPO- ஐ புதன்கிழமையன்று அதானி திடீரென திரும்பப் பெற்றதில் இருந்து, அதானி குழுமத்தின் மீது நெருக்கடி மேகங்கள் எவ்வளவு அதிகமாக சூழ்ந்துள்ளன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அதானி விவகாரம்: இதுவரை என்ன நடந்தது?
2023 பிப்ரவரி 4 – சந்தையில் எந்தக்குழப்பமும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் இந்த விஷயத்தில் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பங்குச் சந்தையை முறைப்படுத்தும் அமைப்பான SEBI கூறியது.
2023 பிப்ரவரி 4 – தனது வேலையை செய்ய பங்குசந்தை முறைப்படுத்தும் அமைப்பிற்கு சுதந்திரம் உள்ளது. இதில் அரசின் எந்த நெருக்குதலும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
2023 பிப்ரவரி 3 – வங்கித் துறை நல்ல நிலையில் இருப்பதாகவும் நிதிச் சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படுவதாகவும் நிதியமைச்சர் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2023 பிப்ரவரி 2 – முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்துக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி, அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்களிடம் இது தொடர்பான முழுமையான தகவல்களை கோரியது.
2023 பிப்ரவரி 2 – நிறுவனத்தின் உரிமையாளர் கெளதம் அதானி 4 நிமிடங்கள் 5 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு FPO-ஐ திரும்பப் பெறுவதற்கான காரணத்தை விளக்கினார்.
2023 பிப்ரவரி 1 – அதானி நிறுவனம் தன் FPO-ஐ திரும்பப் பெற்றது.
2023 ஜனவரி 31 – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க கௌதம் அதானி ஹைஃபா துறைமுகத்தை அடைந்தார். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு முதல்முறையாக அவர் இங்கு பொதுவெளியில் காணப்பட்டார்.
2023 ஜனவரி 31 – FPO விற்பனை அன்று முடிவுக்கு வருவதாக இருந்தது. சஜ்ஜன் ஜிண்டல் மற்றும் சுனில் மித்தல் உள்ளிட்ட சில பிரபல கோடீஸ்வரர்கள், அமைப்பு சாரா முதலீட்டாளர்களாக, நிறுவனத்தின் 3.13 கோடி பங்குகளை வாங்க ஏலத்தில் பங்கெடுத்ததாக செய்தி வெளிவந்தது.
2023 ஜனவரி 30 – அன்று வரை FPO வுக்கு 3% சந்தா மட்டுமே கிடைத்திருந்தது. அபுதாபியை தளமாகக் கொண்ட இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதன் துணை நிறுவனமான க்ரீன் டிரான்ஸ்மிஷன் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் ஆர்எஸ்சி லிமிடெட் மூலம் அதானியின் எஃப்பிஓவில் 40 கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தது.
2023 ஜனவரி 27 – அதானி குழுமம் 250 கோடி டாலர் FPO-ஐ சந்தையில் இறக்கியது.
2023 ஜனவரி 26 – தனது அறிக்கையை தான் பற்றி நிற்பதாகவும், சட்ட நடவடிக்கையை வரவேற்பதாகவும் ஹிண்டன்பர்க் கூறியது.
2023 ஜனவரி 26 – ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை அதானி முற்றிலும் நிராகரித்தார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
2023 ஜனவரி 24 –அதானி தொடர்பான தனது ‘அதானி க்ரூப்: ஹவ் தி வேர்ல்ட்ஸ் தேர்ட் ரிச்செஸ்ட் மேன் இஸ் புல்லிங் தி லார்ஜெஸ்ட் கான் இன் கார்பரேட் ஹிஸ்ட்ரி’ என்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டது.
பட மூலாதாரம், Adani
எஃப்பிஓ என்றால் என்ன?
எஃப்பிஓ அதாவது ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர். பங்குசந்தையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பணத்தை திரட்ட IPO அதாவது இனிஷியல் பப்ளிக் ஆஃபரை நிறுவனங்கள் முதலில் கொண்டு வருகின்றன. அதே போல நிறுவனங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான கூடுதல் பணத்தை திரட்ட FPO-ஐ கொண்டு வருகின்றன.
அதானியின் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு வெளியான அதானியின் எஃப்பிஓவில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியான பிறகு நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டது. ஆனால் நிறுவனத்திற்கு பணம் கிடைக்கவில்லை, என்று சொல்லமுடியாது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதாவது IHC, அதானியின் எஃப்பிஓ-ல் பணத்தை முதலீடு செய்வதாக அறிவித்தது. நாட்டின் வேறு சில பிரபல தொழிலதிபர்கள் மீதமுள்ள தொகையை முதலீடு செய்ய முன் வந்தனர்.
எஃப்பிஓ மூலம் தனது நிறுவனத்தின் பங்குகளை விற்று குழுமத்திற்கு ஏற்பட்ட கடனைக் குறைக்க அதானி விரும்பினார். ஆனால் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் திடீரென எஃப்பிஓவை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்தியாவுக்கும் இழப்பு?
இந்த சம்பவத்தால் இந்தியாவுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மற்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். இது வணிக ஒழுங்குமுறையின் அடிப்படையில் நாட்டின் பிம்பத்தை பாதித்துள்ளது.இது நீண்டகால எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நீண்ட காலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களும், கடன் வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் பொருளாதாரத்தை முதலீட்டிற்கான சிறந்த இடமாக கருதி வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வரை, இந்தியா சுமார் 8500 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் (FDI) பெற்றுள்ளது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.
2000ஆவது ஆண்டு ஏப்ரல் முதல் 2022 செப்டம்பர் வரை நாட்டின் மொத்த எஃப்டிஐ 88,800 கோடி டாலர்களை எட்டியுள்ளது என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
மொரிஷியஸ் மூலம் 26 சதவிகித முதலீடு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் 23 சதவிகிதமும், அமெரிக்கா 9 சதவிகிதமும், நெதர்லாந்து 7 சதவிகிதமும், ஜப்பான் 6 சதவிகிதமும், பிரிட்டன் 5 சதவிகிதமும் முதலீடு செய்துள்ளன. 2 சதவிகித முதலீடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, சைப்ரஸ் மற்றும் கேமன் தீவுகளில் இருந்து வந்தது.
அதானி குழுமத்தின் வணிகங்களில் துறைமுகங்கள், சாலைகள், ரயில், விமான நிலையங்கள் மற்றும் எரியாற்றல் ஆகியவை அடங்கும். மோதி அரசின் கீழ் இந்தியாவின் பொருளாதார லட்சியங்களில் அதானி குழுமம் ஒரு முக்கிய கூட்டாளியாக பார்க்கப்படுகிறது. அதானியும் மோதியும் பல வருடங்களாக நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது.
இப்போது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அதானியை அவரது பெருநிறுவன வாழ்க்கையின் மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது, இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன.
பங்குகளில் முறைகேடு மற்றும் வரி புகலிடங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாக அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது. இதை அதானி வலுவாக மறுத்துள்ளார்.
சரிந்து வரும் நிறுவனத்தின் பெயர்
அதானி குழுமத்தின் பங்குகளை கடனுக்கான பிணையாக ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக வியாழனன்று சிட்டி குழுமத்தின் முதலீட்டுப் பிரிவு அறிவித்தது.
முன்னதாக அதானி நிறுவனங்களின் கடன் பத்திரங்களை உத்தரவாதமாக ஏற்க மாட்டோம் என கிரெடிட் சூயிஸின் கடன் வழங்கும் பிரிவும் அறிவித்திருந்தது. உலகளாவிய கடன் வழங்கும் நிறுவனங்கள் அதானி குழுமத்தின் பத்திரங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள முயற்சிக்கின்றன. இதனால் கெளதம் அதானி குழுமத்தின் மீதான நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருகிறது.
“தற்போதைய நெருக்கடி வெளிநாடுகளில் இந்தியாவின் பிம்பத்தின் மீது நிச்சயம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது” என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளரான சன் ஷீ.
“பாரம்பரியமாகவும் கடந்த காலத்திலும் இந்திய நிறுவனங்கள், சர்வதேச முதலீட்டு சமூகத்தால் எப்போதும் விமர்சிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் மீது நம்பிக்கையின்மை இருந்தது. அதானி தொடர்பான சமீபத்திய சம்பவம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் குறைத்துவிட்டது,” என்று பிபிசி ஹிந்தி சேவையிடம் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
அரசு நிறுவனங்களின் பங்கு
பங்குச்சந்தையில் எந்தவிதமான குளறுபடியும் அனுமதிக்கப்படாது என்றும், இந்த விஷயத்தில் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் பங்குச் சந்தையை முறைப்படுத்தும் அமைப்பான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
செபி தனது அறிக்கையில் அதானி குழுமத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் சந்தையின் வெளிப்படையான மற்றும் திறமையான செயல்பாட்டிற்காக, குறிப்பிட்ட பங்குகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கையாள்வதற்கான கண்காணிப்பு வழிமுறை உள்ளது என்று அது தெரிவித்தது.
அதே சமயம் பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என மத்திய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார். இதனால் எஸ்பிஐ மற்றும் எல்ஐசிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
ஹேமிந்த்ர ஹசாரி ஒரு சுதந்திரமான சந்தை ஆய்வாளர். “இந்த விஷயத்தில் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியோ அல்லது அரசோ ஏன் முன்பே எதுவும் கூறவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலீட்டாளர்களின் கவலைகளை தீர்க்க அவர்கள் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
விநாயக் சாட்டர்ஜி, உள்கட்டமைப்பு நிபுணரும், இன்ஃப்ராவிஷன் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும் ஆவார். இந்த சமீபத்திய நெருக்கடி அதானியின் அல்லது இந்தியாவின் நற்பெயரை பாதிக்கும் என்று கூறுபவர்களுடன் அவர் உடன்படவில்லை.
“இது நிறுவனத்தின் நற்பெயரையோ அல்லது இந்தியாவில் எதிர்கால முதலீடுகளையோ பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. தற்போதைய பிரச்சனை நீண்ட காலம் நீடிக்காது. இது குறுகிய கால பின்னடைவு, “என்று சாட்டர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.
“ஒரு உள்கட்டமைப்பு நிபுணராக கடந்த 25 ஆண்டுகளாக நான் அதானி குழுமத்தை பார்த்து வருகிறேன். துறைமுகங்கள், விமான நிலையங்கள், சிமெண்ட் முதல் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வரை பல்வேறு திட்டங்களைப் பார்க்கிறேன். அவை திடமாகவும், நிலையானதாகவும் உள்ளன. லாபமும் ஈட்டி வருகின்றன. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன,” என்று விநாயக் சாட்டர்ஜி குறிப்பிட்டார்.
அதானி குழும நிறுவனங்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் அவர், “அதானி திட்டங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் அதானி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து மிகத் தெளிவாக அறிந்த வல்லுநர்கள் உள்ளனர். பங்குச் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அதானி குழுமத்தின் முதலீடுகள் அல்லது எதிர்காலத் திட்டங்களைப் பாதிக்காது,”என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
மூடீஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் & புவர் கருத்துக்களில் வேறுபாடு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பத்திரங்களின் மதிப்பீட்டில் உடனடி தாக்கம் ஏற்படாது. ஆனால் எதிர்காலத்தில் சர்வதேச சந்தைகளில் இருந்து நிதி திரட்டும் திட்டங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரேட்டிங் ஏஜென்சி ஃபின்ச் வெள்ளிக்கிழமை கூறியது.
உலகின் புகழ்பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸின் கருத்து ஃபின்ச்சின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது.
அதானி குழுமம் எதிர்கால திட்டங்களுக்கு கடன்களை திரட்டுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்த நிறுவனம் ஏற்கனவே அதிக கடனில் உள்ளதாகவும், வேறு சில நிறுவனங்களிடம் உள்ள பெரிய பண இருப்பு அந்த நிறுவனத்திடம் இல்லை என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது.
இது மட்டுமின்றி வெள்ளியன்று மற்றொரு பெரிய கடன் மதிப்பீட்டு ஏஜென்ஸியான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எலெக்ட்ரிசிட்டி ஆகியவற்றின் மதிப்பீட்டை நெகட்டிவ் ஆக்கியுள்ளது. இதற்கு முன்பு வரை இதே ஏஜென்ஸி இந்த இரண்டு நிறுவனங்களையும் நிலையானதாகக் கருதியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
source