அதானி வணிகத்தை மேம்படுத்துவதே இந்திய வெளியுறவு கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு
பட மூலாதாரம், ANI
அதானி குழுமத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தவறான வழியில் உதவியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரிய அளவில் திருகு வேலை செய்தது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற சந்தை ஆய்வு நிறுவனம். இதையடுத்து அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு மோசமான சரிவை சந்தித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி.
அதானி சொத்து 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலரானது எப்படி?
“2014-இல் உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2022-ல் எப்படி 2வது இடத்திற்கு முன்னேறினார்? பிரதமர் நரேந்திர மோதிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு? கடைசி 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராக உயர்ந்தது எப்படி?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். நண்பரின் வியாபாரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்று பார்ப்பதில் மோதிஜிக்கு தங்கப் பதக்கம் வழங்கலாம் என்றும் விமர்சித்தார் ராகுல்.
“பிரதமர் ஆஸ்திரேலியா செல்கிறார், உடனே அதானிக்கு ஸ்டேட் வங்கி ஒரு பில்லியன் டாலர் கடன் தருகிறது; மோதி வங்கதேசப் பயணம் செல்கிறார். அந்நாட்டில் 1,500 மெகாவாட் மின்சார திட்டத்துக்கான ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு கொடுக்கப்படுகிறது. இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை அதானிக்கு கொடுக்க முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்ததாக 2022ல் இலங்கை மின்வாரிய தலைவர் அந்நாட்டு நாடாளுமன்ற குழுவின் விசாரணையில் தெரிவித்தார்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கை அதானியின் வணிகத்தை மேம்படுத்தும் கொள்கை” என்று பேசினார் ராகுல் காந்தி
மோதி விமானத்தில் அதானி
“முன்பு பிரதமர் நரேந்திர மோதி அதானியின் விமானத்தில் பயணிப்பார். ஆனால் இப்போது அதானி மோதியின் விமானத்தில் பயணிக்கிறார். இருவரும் சேர்ந்து எத்தனை முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்தீர்கள்? பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் அதானி எத்தனை முறை இணைந்துகொண்டார்? பிரதமர் வெளிநாட்டு பயணத்தை முடித்துத் திரும்பிய உடன் அதானி எத்தனை நாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் செய்திருக்கிறார்?கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு எவ்வளவு நிதி அளித்துள்ளார்?” என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.
பொதுத்துறை வங்கிகளில் இருந்து அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அதானி குழுமத்தின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து மக்களவையில் விமானம் ஒன்றில் அதானி – நரேந்திர மோதி இருவரும் ஒன்றாக பயணிப்பது போன்ற போஸ்டர் ஒன்றையும் காண்பித்தார். காட்டி, இதுதான் உறவு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது
இதற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு எதிர்வினையாற்றிய அவைத்தலைவர் ஓம்.பிர்லா, போஸ்டரை காட்ட வேண்டாம் என ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினார். தாங்கள் இதை காட்டினால் பாஜகவினர் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கவுதம் அதானியுடன் உள்ள போஸ்டரை காட்டுவார்கள். இப்படி காட்டுவது உகந்ததல்ல என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, பாஜக எம்பிக்கள் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எம்பி நிஷிகாந்த் துபே, “நீங்கள் பிரதமரை குற்றம் சாட்டுகிறீர்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுங்கள், மோதி அரசில் எந்த விதிகள் மாற்றப்பட்டன என்பதைச் சொல்லுங்கள்” என்று கூறினார்.
விமான நிலையத்தைப் பராமரிப்பதில் முன் அனுபவம் இல்லாதவர்கள் முன்பெல்லாம் விமான நிலைய மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை. தற்போது இந்த விதி மாற்றப்பட்டு அதானிக்கு 6 விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் மிகவும் லாபகரமான விமான நிலையமான மும்பை விமான நிலையம், சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்தி, அதைப் பராமரித்து வந்த ஜிவிகே குழுமத்திடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்திய அரசால் அதானிக்குத் தரப்பட்டது என்றார் ராகுல்காந்தி.
துறை சார்ந்த முன் அனுபவம் ஏதும் இல்லாதபோதும் அதானிக்கு 4 பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது எப்படி என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.
ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைப்பதாக கூறினார், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்.
விதிகளை மேற்கோள் காட்டி, ஆதாரம் இல்லாமல் யாரையும் சபையில் குற்றம் சாட்ட முடியாது என்று கூறினார் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
source