2000 ரூபாய் நோட்டு வாபஸ் சரியா? ஆயிரம் ரூபாய் நோட்டு மீண்டும் புழக்கத்தில் வருமா?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பும் நாடு முழுவதும் விவாதப்பொருளாக்கியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அதிர்ச்சியும் சலசலப்பும் குறைவு என்றாலும் கூட, 2,000 ரூபாய் வாபஸ் நடவடிக்கையும் பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வந்த நேரம், அதன் பொருளாதார, நிதி, அரசியல் தாக்கங்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் அதன் நோக்கத்தை நிறைவு செய்ததா? இந்த அறிவிப்பால் யாருக்கேனும் பாதிப்பு வருமா? 2016-ம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு வருமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்திய 2,000 ரூபாய் நோட்டுகளை சுமார் ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெறும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் தரப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என விமர்சித்துள்ளார்.
இதேபோல், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் இந்த நடவடிக்கை மீதான விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளார். “ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல.. அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை. அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமோ, “இது எதிர்பார்த்ததுதான். 2,000 ரூபாய் நோட்டு பணப் பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. 2016 நவம்பரிலே நாங்கள் இதைச் சொன்னோம். நாங்கள் சரியாகக் கணித்திருக்கிறோம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “அதிக அளவில் பரிமாற்றத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2,000 நோட்டு கட்டுக்கட்டாக அறிமுகம் செய்யப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அரசாங்கம்/ஆர்.பி.ஐ ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1,000 ரூபாய் நோட்டை அரசாங்கம்/ஆர்.பி.ஐ மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 2,000 ரூபாய் நோட்டு ஒருபோதும் ‘சுத்தமான’ நோட்டாக இருக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானது முதலே மக்கள் மத்தியிலும் அதுகுறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. கடந்த ஈராண்டுகளாகவே 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதை கண்கூடாக காண முடிந்ததால் இந்த நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மக்கள் முன்கூட்டியே கணித்திருந்ததை அவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் பலவும் உறுதிப்படுத்துகின்றன.
2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம், அவற்றைத் திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை குறித்த சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் விடை காண நிதி ஆலோசகரும், எழுத்தாளருமான சோம.வள்ளியப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“காருக்கு ஸ்டெப்னி போல ரூ.2,000 நோட்டு பயன்பட்டது”
2,000 ரூபாய் நோட்டை ஆறே ஆண்டுகளில் திரும்பப் பெறும் நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “காரில் நாம் வைத்திருக்கும் ஸ்டெப்னியை போலவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி பயன்படுத்தியுள்ளது. அதாவது, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, ரூ,1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் சுமார் 89 சதவீதம் ஒரே இரவில் செல்லாததாகிவிட்டது.
அதன் மதிப்பை ஈடுகட்ட வேண்டிய கட்டாயம் இருந்த அதேநேரத்தில், குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் நோட்டுகளை அச்சிடுவது கடினம் என்பதால்தான் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற ரூபாய் நோட்டுகள் படிப்படியாக அதிக அளவில் புழக்கத்தில் வந்துவிட்டதால், பணப்புழக்கம் சீராகிவிட்டது. இதற்கு மேலும் ஸ்டெப்னி தேவையில்லை என்று கருதுவதால்தான், இக்கட்டான காலகட்டத்தை கடக்க ஸ்டெப்னி போல் பயன்படுத்திய 2,000 ரூபாய் நோட்டுகளை இப்போது செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.” என்று கூறினார்.
1,000 ரூபாய் நோட்டு மீண்டும் புழக்கத்தில் வருமா?
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனம் குறித்த கேள்வியை சோம. வள்ளியப்பனிடம் முன்வைத்தோம். குறிப்பாக, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் அறிமுகமாக வாய்ப்புள்ளதா? என்று வினவினோம். அதற்குப் பதிலளித்த சோம.வள்ளியப்பன், “இப்போதைய சூழலில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கான தேவை இருக்கவே செய்கிறது. காரணம், பணவீக்கம்தான். ஆண்டுதோறும் 7 சதவீதம் பணவீக்கம் இருக்கிறது என்று கணக்கில் கொண்டால், 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது சுமார் 50 சதவீதம் அளவுக்கு பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, அப்போதைய 500 ரூபாயின் மதிப்பு இப்போது 250 ரூபாயாக குறைந்துவிட்டது.
அதாவது 2016-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், நாம் பயன்படுத்தும் 500 ரூபாயின் மதிப்பு வெறும் 250 ரூபாய் தான். இதனால், நாம் அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. பணவீக்கம் எதிரொலியாக, 5 பைசா, 10 பைசா, 20 பைசா நாணயங்கள் எப்படி வழக்கில் இருந்து நீக்கப்பட்டு 10, 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. அதேபோல், அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள், அதாவது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்றைய தேவையாகவே இருக்கிறது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலைமையை அலசி ஆராய்ந்து, ரிசர்வ் வங்கிதான் இதுகுறித்து கொள்கை முடிவை எடுக்கும்.” என்றார்.
2,000 ரூபாய் நோட்டு வாபஸ் அரசியல் ரீதியில் எதிரொலிக்குமா?
அடுத்தபடியாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “2,000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை வெளியிட தேர்வு செய்த நேரம் வேண்டுமானால், பா.ஜ.க.வின் கர்நாடக தேர்தல் தோல்வியுடன் ஒத்துப் போகலாம். இதனால், பா.ஜக.வின் கர்நாடக தேர்தல் தோல்வி குறித்த பேச்சுகள் பின்னுக்குத் தள்ளப்படலாம். ஆனால், இதற்கான நடவடிக்கைகள் முன்பே தொடங்கிவிட்டன.
2016-ம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது முழுவீச்சில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அதன் பின்னர் படிப்படியாக அதனைக் குறைத்து ஒரு கட்டத்தில் அச்சடிப்பதை முழுவதுமாக நிறுத்தியேவிட்டது. பின்னர், வங்கிகள் வாயிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்திற்கு வருவதையும் படிப்படியாக கட்டுப்படுத்தி வந்தது. ஆகவேதான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கணிசமாக குறைந்துவருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற நாடகத்தின் கடைசிக் காட்சியாகவே 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளது. இதன் மூலம், 2,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துள்ள நபர்களும் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.” என்று கூறினார்.
“2016 நிலைமையுடன் இதனை ஒப்பிட முடியுமா?”
மேலும் தொடர்ந்த சோம.வள்ளியப்பன், “2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒரே இரவில் மக்களின் கைகளில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டுவிட்டன. அவற்றை மாற்றிக் கொள்வதிலும் சிரமங்கள் இருந்ததால், நீண்ட காலமாக அந்த ரூபாய் நோட்டுகளை எதிர்கால சேமிப்பாக கையில் வைத்திருந்த மக்கள் பெருமளவு அவதிப்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.
பட மூலாதாரம், Getty Images
ஏ.டி.எம்.கள் உள்பட பொதுவாகவே வங்கி பரிவர்த்தனைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு கணிசமாக குறைந்து வருவதால் ஏற்கனவே உஷாராகி விட்ட மக்கள் இன்று 2,000 ரூபாய் நோட்டுகளை அவற்றை பெரும்பாலும் சேமித்து வைத்துக் கொள்வதில்லை.
கையில் வைத்திருக்கும் சிலரும் அவற்றை மாற்றிக் கொள்ள 4 மாத அவகாசம் இருக்கிறது. 2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையால் யாருக்கும் சிரமம் இருக்காது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல தேர்தல்களை நாம் கண்டுவிட்டதால், அவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இது தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
source